
பெற்றோரைப் பேணுவோம் - Essay
If you want to read and download more essays in our website click the "Essay" button and choose your "medium" to read and download.
பெற்றோரைப் பேணுவோம்
நமக்கு என்றும் இனியவர்கள் தாய் தந்தையரே. இவர்களை விடச் சிறந்தவர் எவரும் இவ்வுலகில் எமக்கில்லை. ஆசிரியரும் தெய்வமும் அரசனும் அவர்களுக்கு பின்னவராவர். இதன் மூலம் பெற்றோரின் பெருமை நன்கு புலப்படுகிறது.
நம்மைப் பெற்று வளர்த்திட நம் பெற்றோர் பட்ட துன்பங்கள் பற்பல. இறைவனை வேண்டி விரதமிருந்தனர். ஈ, எறும்பு தீண்டாமல் பேணிவளர்த்தனர். வேளையறிந்து உணவளித்துக் காத்தனர். நமக்கு நோய் ஏற்பட்டால் அவர்கள் அடைந்த கவலையும் துன்பமும் அளவிடத்தக்கனவல்ல.
நாம் பருவமானதும் நம்மைப் பாடசாலைக்கு அனுப்பினார்கள். நமக்கு வேண்டிய சகல உபகரணங்களையும் உடைகளையும் வாங்கித்தந்தனர். நாம் கல்வி கற்று நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வாழவேண்டுமென விருப்பம் கொண்டு செயற்பட்டனர். தங்கள் பசி, பிணி, துன்பம் அனைத்தையும் மறந்து நம்மைக் கண்ணை இமை காப்பது போற் காத்து வளர்ந்தனர். அவர்களது அன்பும் தியாக சிந்தனையும் என்றும் நம்மால் மறக்க முடியாதவையாகும்.
வாழ்நாள் முழுவதும் நமது நலனுக்காகப் பாடுபட்ட பெற்றோர்களை நாம் என்றும் நன்றியுடன் போற்றக் கடமைப்பட்டுள்ளோம். நமது பெற்றோர்களே நமது கண்கண்ட கடவுளராவர். அவர்கள் சொல்வனவற்றை நாம் கேட்டு நடத்தல் வேண்டும். ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்ற பொன் மொழியின் படி பெற்றோரின் குறிப்பறிந்து நாம் செயற்பட வேண்டும். நமது பணியையும் அன்பையும் கண்டு அவர்கள் மனம் மகிழும்படி நாம் நடக்க வேண்டும். குறிப்பாக முதுமையடைந்த வேளையில் பெற்றோரின் தேவையறிந்து அவர்களுக்கு வேண்டியவற்றை உதவிட வேண்டும். பெற்றோர் உடலும் உள்ளமும் நோவாமல் காத்திட வேண்டும்.
இன்று நம்மத்தியில் பெற்றோரைப் பேணிக் காப்பதில் பிள்ளைகள் அதிக நாட்டம் கொள்வதாயில்லை எனக் கூறப்படுகிறது. புலப்பெயர்வும் இதற்கு ஒரு காரணமெனக் கருதப்படுகிறது. சிலர் தம் முதிய பெற்றோரைத் தனியாக வாழவிட்டுத் தம் மனைவி மக்களோடு தனித்து வாழ்கின்றனர். சில இளைஞர்கள் பெற்றோரின் அறிவுரைகளைக் கருத்திற் கொள்ளாது அவர்களை மனம் நோகும் வகையில் கண்டிக்கவும் முற்படுகின்றனர். பாடுபட்டு வளர்த்த பெற்றோர்களது அன்பையும் அருமையையும் நன்றியையும் மறந்து இவ்விதம் நடந்து கொள்வது தவிர்க்கப்படல் வேண்டும். பிள்ளைகள் தமது கடமைகள் எவையென்பதை நன்கு உணர வேண்டும். தாய் தந்தையரைத் தவிக்க விட்டுவிட்டுச் சில பிள்ளைகள் புண்ணிய தலங்களுக்கு சென்று தான தருமங்களைச் செய்ய விரும்புகின்றனர். இது மிகவும் கவலைக்குரியதாகும். தாய் தந்தையரை விட மேலான தெய்வம் இல்லை என்பதை இவர்கள் உணர வேண்டும். ‘தாய் தெருவில் பிச்சைக்கு அலைய மகன் கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம்’ என நமது நாட்டுப்புறங்களில் கூறுவது போன்ற செயல்கள் இடம்பெறக்கூடாது. பெற்றோரைத் தெய்வமாகக் கருதிச் செயற்படுவதே பிள்ளைகளின் கடமையாகும்.
தாய் தந்தையரைப் போற்றி நடந்த பெரியோர் பலருடைய வரலாறுகளைப் படித்திருக்கிறோம். தந்தை சொற்படி காட்டுக்குச் சென்ற இராமன் இதற்குச் சிறந்த சான்று ஆகும். ஊலகம் போற்றும் மகாத்மா காந்தியடிகள் கூடத் தன் வாழ்வில் இறுதி வரை தாயின் சொல்லை மறவாது வாழ்ந்து அழியாப் புகழ் பெற்றமையை நாம் நினைவிற் கொள்ளல் வேண்டும். நமது அறநூல்கள் எல்லாம் தாய் தந்தையரை மதித்துப் பேணிக் காத்திட வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன. பெற்றோரைப் பேணி அவர்கள் மனம் நோகாது மகிழ்வுடன் வாழ்வதற்கு உதவுதலே பிள்ளைகளின் பெருங் கடனாகும்.





0 Comments